இந்தியாவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் விழாவுக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையொட்டி நாளை(15.08.2023) காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கோட்டை பகுதியைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு:
நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப் பகுதிவரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்கச் சாலை (என்எப்எஸ் சாலை) வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்கச் சாலை(என்எப்எஸ் சாலை) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமிசாலை, இவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையைச்சென்றடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், எப்எப்எஸ் சாலைவழியாக பாரிமுனையை சென்றடையலாம் என சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.