சென்னை பல்கலைக்கழக இளங் கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணணயதளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும், மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் 30-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வுமுடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்
www.results.unom.ac.in
www.ideunom.ac.in
www.egovernance.unom.ac.in
இளங்கலை மாணவர்கள் மறு கூட்டலுக்கு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய கட்டணத்துக்கான (தாள் ஒன்றுக்கு ரூ.300) டிமாண்ட் டிராப்டுடன் ஜூலை 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல் 5 செமஸ்டர் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 6-வது செமஸ்டரில் ஒரேயொரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த இளங்கலை மாணவர்களும், அதேபோல், முதல் 3 செமஸ்டர் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 4-வது செமஸ்டரில் ஒரே யொரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த முதுகலை மாணவர்களும் சிறப்பு துணைத் தேர்வெழுத ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி முடிவடையும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய தேர்வுக்கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் ஜூலை 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பல்கலைக்கழக இணையதளத்தல் இருந்து ஜூலை 18 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 23-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பின்வரும் மையங்களில் நடைபெறும்.
1. பேட்ரிசன் கலை அறிவியல் கல்லூரி, காந்தி நகர், அடையாறு (பிகாம், பிபிஏ)
2. பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் (பிஎஸ்சி, பிஏ)
3. ஸ்ரீ கந்தசாமி கல்லூரி, அண்ணா நகர் (முதுகலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகள்)
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary :Madras University Results 2016 Declared @ unom.ac.in-UNOM Results For UG PG Exams