சிவராத்திரி விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

சிவராத்திரி அன்று விரதம் கடை பிடிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூஜைகளில் கலந்து எம்பெருமானை வணங்க வேண்டும்.

வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரும். பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும், சிவபுராணம் கேட்டும், தேவாரம், திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *