அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 பேர் பதிவு செய்தனர். அதில் 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியுள்ளனர். இவர்கள் மட்டுமே சேர்க்கை பெறமுடியும்.

இந்நிலையில் விண்ணப்பித்ததில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நேற்று வெளியிட்டது. இவற்றை கல்லூரிகள் http://www.tngasa.in/ எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அவற்றை சரிபார்த்து துறை வாரியாக தரவரிசைப் பட்டியலை கல்லூரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

மேலும், தரவரிசையின் அடிப்படையில் மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து மே 29-ம்தேதி முதல் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி அளவில் நடைபெறும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *