சென்னை மெட்ரோ ரயிலின் உயர்மட்ட பாதையின் பணிகள் பல இடங்களில் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. அதுபோலவே சுரங்கப் பாதையின் பணிகளும் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரிக்குள் முடித்துவிட்டு அதே ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

உயர்மட்ட ரயில்பாதை போல் அல்லாது சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் அதிக சவால்களை மெட்ரோ ரயில்வே துறையினர் சந்திக்க நேர்ந்ததாகவும், முக்கியமாக நேரு பூங்கா முதல் எழும்பூர் வரை உள்ள பகுதிகளில் அதிகளவு பாறைகள் இருந்ததால் அந்த பகுதியின் பணிகளை முடிக்கவே ஒரு ஆண்டு காலம் தேவைப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவற்றில் நேரு பூங்கா- எழும்பூர், ஷெனாய் நகர்- அண்ணாநகர் டவர்- திருமங்கலம் இடையிலான சுரங்க ரயில் நிலைய பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும் மற்ற பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே இன்னும் ஓரிரண்டு மாதங்களில் கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரயில், மக்களின் பயன்பாடுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : When the work is subject to the metro ?