நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய பயணிகள் ரயில்சேவையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை திருவொற்றியூரில் நடந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை – நெல்லூர் மார்க்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், நெல்லூர் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு பணியின் காரணமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். எனவே, இந்தத் தடத்தில் புதிய ரயிலை இயக்க வேண்டுமென பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே, இந்தத் தடத்தில் புதிய ரயிலை இயக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், நெல்லூர் – சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் சேவையை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு நெல் லூரிலிருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். இதேபோல், கும்மிடிப்பூண்டியில் ரயில்வே சுரங்கப்பாதை, அக்கம்போட்டியில் புதிய புக்கிங் அலுவலகம், திருவொற்றியூரில் நடைமேம்பாலம் மற்றும் புதிய புக்கிங் அலுவலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

திருவொற்றியூரில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், கே.பாண்டியராஜன், அதிமுக எம்.பிக்கள்நவநீத கிருஷ்ணன், வேணுகோபால், வெங்கடேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘‘தென்சென்னையைப் போல வடசென்னையும் வளர்ச்சி அடைய ரூ.16,000 கோடிசெலவில் ரயில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இரும்பு, நிலக்கரி யைக் கையாளுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ரூ.160 கோடியில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது முழுமை பெறும்போது வடசென்னையில் போக்குவரத்து முற்றிலுமாக சீராகும்.

ரூ.2,600 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான 2-வது மெட்ரோரயில் சேவை விரைவில் தொடங்கும். தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போன்று வட சென்னை அனைத்து வசதிகளைப் பெறும்.

அடுத்த 5 ஆண்டுகளில் வடசென்னை எல்லா கட்டமைப்புகளைக் கொண்ட சிறந்த மாவட்டமாக வளர்ந்து விடும். மெட்ரோ ரயில் கனவுத் திட்டம் நினைவாகி உள்ளது. அதேபோன்று படிப்படியாக அனைத்து திட்டங்களையும் அரசு விரைவில் நிறைவேற்றும்’’ என்றார்.

அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் குறிப்பாக சரக்கு ரயில் முனையம் திருவொற்றியூரில் அமைக்க வேண்டும். ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க வேண்டும். மேலும், சென்னை – கன்னியாகுமரிக்கு அதிவிரைவு பயண சேவை தொடங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

முன்னதாக தெற்கு ரயில்வே செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷிரேஸ்தா பேசினார். இந்த விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் நவீன்குலாத்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *