தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும் ரேஷன் கடைக்கு வரும்போது ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும் என்றும் இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதுவரை ஆதார் அட்டை வாங்காதவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் குடும்ப அட்டைகள் தயாராகி வரும் நிலையில் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் இருப்பில் உள்ளது? என்பதை குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய உள்ளது.

இதன்படி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுடன் கூடிய ஆதார் அட்டை நகலை பெற்று ரேசன் கடையில் உள்ள இருப்பை நுகர்வோர்கள் அறிந்து கொள்ள வசதி செய்யவுள்ளது. இத மூலம் முற்றிலுமாக முறைகேடுகள் தடுக்கப்படும் என்பதால் இந்த ஏற்பாட்டை அரசு செய்து வருகிறது.

இதற்காக குடும்ப அட்டைதாரர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்களை வாங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைக்காரர்களுக்கும், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-

ரேஷன் பொருள் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை தடுக்கவும், பேப்பர் இல்லா பணியை ஊக்கப்படுத்தவும் ஜி.பி.எஸ், தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படும் ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கருவியில் ரேஷன் கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து, குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படும். பொருட்கள் வாங்கும் போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும்.

குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதற்கு பதிலாக, பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, வாங்காத பொருட்களின் விவரங்கள் அவர்களது குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். முறைகேடுகளையும் தடுக்க முடியும்.

இதற்காக குடும்ப அட்டைகளின் விவரங்கள், ஆதார் அட்டை எண், செல்போன் எண் போன்றவை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களிடம் நாளை (ஜூன்-1) முதல் ஆதார் கார்டு நகல் மற்றும் செல்போன் எண்கள் வாங்கப்பட உள்ளது. அதுவும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளின் நகல்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

English Summary : New procedure from tomorrow that everyone should bring their Aadhar card along with Ration card to Ration shop.