பாலியல் பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க பாண்டிச்சேரி கல்லூரி பேராசிரியை சிவசத்யா என்பவரும், மூன்றாம் ஆண்டு மாணவர் ஜெயராஜ் என்பவரும் இணைந்து ‘மித்ரா’ என்ற புதிய மென்பொருளை கண்டுபிடித்து உள்ளனர்.

பாண்டிச்சேரி பகுதிக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை ஆண்ட்ராய்ட் செல்போன்களில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மென்பொருள் குறித்து பேராசிரியை சிவசத்யா கூறும்போது, “ஆறு மாத உழைப்பில் இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளதாகவும், தற்போது புதுவை பகுதிக்கு மட்டும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை செல்போனில் இன்ஸ்டால் செய்து, ஆபத்து நேரத்தில் செல்போன் ஒலி பட்டனை நீண்ட நேரம் அழுத்தினாலே போதும் என்றும், அதன் மூலம் அருகிலுள்ள காவல்நிலையம் மற்றும் 3 நண்பர்களுக்கு இந்த மென்பொருள் குறுஞ்செய்தியை அனுப்பிவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஒலிபட்டனை தெரியாமல் அழுத்தி விட்டால் மீண்டும் ஒரு முறை அழுத்துவதன் மூலம் தடுத்துவிடலாம் என்று தெரிவித்த சிவசத்யா, இந்த மென்பொருளை பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த மென்பொருளை நேற்று புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். பெண்ணியல் படிப்பு மையத் தலைவர் ஆர்.நளினி, மகளிர் நலக்குழுத் தலைவி ஜி.சந்திரிகா, இயக்குநர் இந்துமதி, ஒலாந்திரியேத் சமூக அமைப்பு நிறுவனர் மாம்டிபிலிக் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

English Summary : New software Developed for women protection