சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு முன்பு ‘நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தவில்லை’ என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி வரை ரூ.1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சொத்துவரியினை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி மொத்தமுள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.85 லட்சம் சொத்து உரிமையாளர் தங்களது சொத்துவரி முழுமையாக செலுத்தி உள்ளனர். தற்போது, தினசரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் (https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision/) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நீதிமன்ற வழக்குகள் நிலுவை உள்ள 100 சொத்து உரிமையாளர்கள் மூலம் ரூ.57 கோடியும், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்து உரிமையாளர்களின் மூலம் ரூ.35 கோடியும் சொத்துவரி நிலுவை உள்ளது.

இந்நிலையில் சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்து வரியினை நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்புப் பதாகைகள் வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *