சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் சார்பில் இணைய மருத்துவ இதழ் ஒன்று புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் இதுபோன்ற இணைய மருத்துவ இதழ் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையதள மருத்துவ இதழில், மருத்துவ மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மற்றும் பிற மருத்துவர்கள் என அனைவரும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும், மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான குறிப்புகளையும் இந்த மருத்துவ இதழில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தின் ஆசிரியர் குழுவில் மூத்த கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இணையதளத்திற்கு வரும் படைப்புகள் அனைத்தும் இந்த குழுவினர் பரிசீலித்த பின்பே வெளியாகும். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதோடு, அதுகுறித்து விவாதிக்கவும், பிற பேராசிரியர்களின் கருத்துக்களைப் பெறவும் இந்த இணையதளத்தில் வசதி உள்ளது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த இணையதளம் தொடங்கப்பட்டதாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

இந்த இணையதளம் கல்லூரி மாணவர் சபரிசெல்வன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. www.smj.org.in என்ற முகவரியில் இந்த இதழைப் பார்வையிடலாம்.

English Summary: Online Medical Journals are released and Updated for Stanley Medical College.