அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மாணவர் தேர்ச்சி விவரங்கள் அண்ணா பல்கலையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இவ்வருடம் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஒரு கல்லூரியின் தரத்தை அந்த கல்லூரியின் ரிசல்ட்டை வைத்தே அறிந்து கொள்ள முடியும். எனவே தேர்ச்சி விகிதங்களின் சதவீதத்தை வைத்து மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஒருசில கல்லூரியில் மிகக்குறைந்த அளவில் அதாவது மொத்தமே 3 மாணவர்களும், 6 மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிப் பெறவில்லை. இந்த வகையான கல்லூரிகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேற்று வெளியான இந்த தேர்ச்சி விகித பட்டியலில் 522 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் விழுப்புரம் வேதாந்த தொழில்நுட்பக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இங்கு தேர்வெழுதிய 214 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 2.89 சதவீதமாகும். இதற்கு அடுத்ததாக கோவை விஷ்ணு லட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 60 பேர் தேர்வெழுதி 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 5 சதவீதமாகும். கன்னியாகுமரி நாராயணகுரு சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதிய 64 பேரில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 7.81 சதவீதமாகும்.
20 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்க தேர்ச்சி விகிதம் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 516 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் வேலூர் ஸ்ரீ சித்தேஸ்வரார் பொறியியல் கல்லூரி கடைசி இடத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் தேர்வெழுதிய 14 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. திருவண்ணாமலை ஆக்ஸ்ஃபோர்ட் பொறியியல் கல்லூரியில் 260 பேர் தேர்வெழுதியதில் ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, 21 பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 33 கல்லூரிகள் 25 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 44 கல்லூரிகள் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன. 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை 191 கல்லூரிகள் பெற்றுள்ளன.

அதேபோல் இந்த ஏப்ரல்-மே பருவத் தேர்வு தேர்ச்சி விகிதப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் அப்லைடு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 97.32 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுப்படியாக 94.45 சதவீத தேர்ச்சியுடன் நாமக்கல் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியும், மூன்றாமிடத்தில் 93.48 தேர்ச்சி விகிதத்துடன் காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.

2015 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலிலும் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் அப்லைடு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 97.01 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் ராம்கோ தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 87.97 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், திருவள்ளூர் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 87.91 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

இந்தப் பருவத் தேர்வில் 319 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. அதுபோல 223 கல்லூரிகளில் 40 சதவீத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 137 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 103 பொறியியல் கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 66 பொறியியல் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதமும் இடம்பெற்றுள்ளன.

522 பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை முழு அளவில் தெரிந்து கொள்ள http://aucoe.annauniv.edu/pdf/ap/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_AM15_WITH_TNEACODE.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

English Summary : Passing percentage of Tamil Nadu engineering colleges announced.