மெட்டா நரேட்டிவ் என்கிற பெரும் கதையாடல்கள் நவீனத்துவத்தின் முக்கிய கூறு. இது எல்லா மக்களின் விருப்பு வெறுப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் மையத்தில் இருக்கும் வலிமை பெற்றவர்களை மட்டும் வளப்படுத்த உதவுகிறது. விளிம்பு நிலையில் வாழும் மக்களின் குரல்களுக்கு நவீனத்துவம் செவி சாய்க்கவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.

அறிவியல் வளர்ச்சிகள் மனிதக்குலத்தின் மேன்மைக்கா அல்லது அழிவுக்கா என்ற விவாதம் எழத் தொடங்கியது.

நவீனத்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

அதன் விளைவாகத் தோன்றியது பின் நவீனத்துவம்.

பின்நவீனத்துவம் என்பது தத்துவமல்ல. கட்டு உடைத்தல் என்று சொல்லலாம்.
அல்லது நவீனத்துவத்திற்கு எதிர்வினையாகவும் கருதலாம்.

பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிற்று. கட்டப்பட்ட மையங்களைத் தகர்த்தது.

உதாரணமாக, அப்பா அம்மா மகன்கள் மகள்கள் என்று ஒரு பெரிய குடும்பம் எடுத்துக் கொள்வோம். வளர்ப்பு, கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் வித்தியாசங்கள் வரும்போது, மகன்களில் ஒரு சிலர் உச்ச நிலைக்கும், வேறு சிலர் கீழ் நிலைக்கும் சென்று விட்டதாகக் கருதுவோம். அப்படிப்பட்ட மக்கள் தங்கள் பெற்றோர்களிடம் வன்முறையாக அணுகுவார்கள். குடும்ப அமைப்பினை கேள்விக்குறியாக்குவார்கள்.

அதைப்போலத்தான் பின்நவீனத்துவம் சமூகம் என்ற பெரும் குடும்பத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது. ஒருவகையில் மொத்த ஆட்டத்தையும் கலைத்து விடுவது. நான் இல்லாத ஆட்டத்தில் மற்றவர்கள் மட்டும் என்ன ஆடுவது‌ என்கிற மனநிலை.

பின்நவீனத்துவம் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லாமல் இன்னும் பிரச்சினைகளை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டுவோரும் உண்டு.

இந்த குற்றச்சாட்டு நியாயமானது அல்ல.
பின் நவீனத்துவத்தின் கேள்விகளை எளிதில் புறக்கணித்து விட முடியாது.

இதற்கு என்ன தீர்வு?

இன்க்ளூசிவினஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மொத்த சமுதாயத்தையும் உள்ளடக்கி முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். ஏற்றத்தாழ்வற்ற சமநிலை. எல்லோருக்கும் சமூக நீதி. இதுதான் தீர்வாக அமைய முடியும்.

பெண்ணியம், கருத்தடை, திருமண விலக்கு, மாற்றுப் பாலினத்தவர், ஓர் பாலின ஈர்ப்பார், மாற்றுத் திறனாளிகள் – குறித்து பெருமளவில் இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றால் அதற்குப் பின் நவீனத்துவத்தின் பங்கு அதிகம்.

தமிழ்நாடு இன்றைக்கு சமூக அரசியல் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கிறது என்று சொன்னால், மாபெரும் சமூக மாற்றம் ( சாதி அமைப்புகளில் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடும்‌ சூழல்) அடைந்தது என்று சொன்னால், மிக முக்கிய காரணம் சென்ற நூற்றாண்டில், உலகம் பின் நவீனத்துக்குச் செல்வதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு அதில் கரை கண்டு விட்டது.

அதற்கு வித்திட்ட மாபெரும் பின் நவீனத்துவவாதி என்றால் பெரியாரைச் சொல்லலாம்.

எல்லாவற்றையும் கேள்வி கேட்டார்.
‌எவையெல்லாம் மனித மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிராக இருந்ததோ அதை தகர்த்தெறிந்தார். சுக்கு நூறாக உடைத்தெறிந்தார். ஜாதி மதம் மொழி நாடு இனம் என எந்த பற்றுமே இல்லாமல் மானிட பற்றையே முழுமூச்சாகக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு அவருடைய 144 ஆவது பிறந்தநாள் தினம்.

கோ. ஒளிவண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *