இண்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் இ-டிக்கெட் முறைக்கு ருபே கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, தேசிய பணம் செலுத்தும் கழகம் ஆகியவை கூட்டாக இணைந்து ருபே’ என்னும் பிரிபெய்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிக்கத்தக்க வகையில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ருபே கார்டை பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுக்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இந்த கார்டை பயன்படுத்தி மாதம் ஒன்றுக்கு முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூல் செய்ய மாட்டாது. ஐந்து பரிவர்த்தனைகளுக்கு மேல் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆறு மாதங்களுக்கு பின்னர் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும்

மேலும் ருபே கார்ட் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள இலவச விபத்து காப்பீடு ஒன்றும், அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப பரிசுப்புள்ளிகளும் வழங்கப்படும்.

இந்த கார்டை பெறுவதற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த ருபே கார்டை யூனியன் பேங்க் ஆப் இந்தியா அலுவலகங்கள், அல்லது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளங்கள் ஆகியவற்றில் பெற்று கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இந்த ருபே கார்டை ரயில் டிக்கெட் எடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம் என்றும் வருங்காலத்தில் ஷாப்பிங் போன்ற பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தலைவர் ஏ.கே.மனோச்சா ருபே கார்டு அறிமுக விழாவில் கூறியுள்ளார்.

English Summary : Indian Railways Institute of Food and Tourism, Union Bank of India, the National Payment Corporation jointly introduced “Rupay” prepaid Card.