தொடர்ந்து ஐந்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது ‘24ஏ.எம். ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கின்றார். “விஜய் 59” படத்தை இயக்கி வரும் அட்லியிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள இந்த படம் காதல் மற்றும் காமெடி அம்சங்களை கொண்டது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளராக அனிருத், அரங்க அமைப்புக்கு டி.முத்துராஜ், படத்தொகுப்புக்கு ரூபன், ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தைச் சார்ந்த ஷான் ஃபுட் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகை உள்பட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

எளிய முறையில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை” என்றார்.

English Summary : Sivakarthikeyan to act in “24 A.M.Studios” produced by his friend R.T.Raja.