Childlineசென்னை போன்ற பெருநகரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் சில சமயம் இரவில் வெகுநேரம் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் சில சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது  ரெயில் நிலையத்தில் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய தகவல் தெரிவிக்க ‘குழந்தைகள் உதவி மையம்’ ஒன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பச்சிளங் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுப்பது மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவது போன்ற செயல்களை செய்வதற்கு என்றே ஒருசில கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரெயில்வே போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாக தமிழ்நாட்டில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் உள்பட 20 ரெயில் நிலையங்களில் ‘குழந்தைகள் உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு ரெயிலில் காணாமல் போகும் மற்றும் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி 1098, 1512 என்ற இலவச எண்களில் தகவல் தெரிவிக்கலாம். காணாமல் போகும் குழந்தைகள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிப்பதன் மூலம் ரெயில்வே போலீசார் விரைந்து செயல்பட முடியும்.

குழந்தைகள் உதவி மையம் நேற்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொண்டு நிறுவனங்கள், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயல்படும். தொடக்க நிகழ்ச்சியில் ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary:Chennai Central railway station ‘ Childline ‘ beginning