451410-whatsappஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இளையதலைமுறையினர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படும் வாட்ஸ் அப் இணையதளத்தை நாட்டின் பாதுகாப்பு காரணமாக தடைவிதிக்க வேண்டும் என்று ஹரியாணாவைச் சேர்ந்த தகவலறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் தாக்கல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

செல்போன் மூலம் ஒருவருடன் ஒருவர் உரையாடவும் அல்லது பல பேர் ஒரே நேரத்தில் உரையாடிக் கொள்ளவும், தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் விடியோ படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் “வாட்ஸ் – அப்’ போன்ற 20 வகையான செயலிகள் இருக்கின்றன.
பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும் இந்த செயலிகளை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் ஆகியோர் தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும், இதில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் பெற முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது.

வாட்ஸ் – அப் போன்ற செயலிகளை வழங்கும் நிறுவனங்களின் ரகசிய குறியீடுகள் தெரியாமல், அந்தத் தகவல்களைக் காண்பது இயலாத காரியமாகும். எனவே, இந்தச் செயலிகள் யாவும் நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குகிறது.

மேலும், 1885-ஆம் ஆண்டின் இந்தியத் தந்தி சட்டம், 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் இந்தச் செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் “வாட்ஸ் – அப்’, “ஹைக்’, “வைபர்’, “டெலிகிராம்’ போன்ற பயன்பாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சுதிர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்ரு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு மீது எந்த விசாரணையும் நடத்தாமல் அதனை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த அரசு அமைப்புகளிடம் மனுதாரர் அணுகலாம். இல்லையெனில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (டிடிஎஸ்ஏடி) முறையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

English Summary: Supreme Court dismisses petition seeking ban on WhatsApp