தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த வருடமும் பொங்கல் திருநாள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தை 2ஆம் நாள் உழவர் திருநாளாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவரை போற்றும் வகையில் மைலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வித்தியாசமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதிலும் இருந்து 133 பிரபலமான தவில் கலைஞர்கள், 133 நாதஸ்வர கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அன்றைய நாளின் மாலை 5 மணியளவில் இசை நிகழ்ச்சி தொடங்கியது. திருவள்ளுவர் படத்துக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்ட ஆலோசகர் மயிலை சத்யா, கோவில் நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஒரே மண்டபத்தில் நீண்ட வரிசையில் கலைஞர்கள் தரையில் அமர்ந்தபடி நாதசங்கமத்தை அரங்கேற்றினார்கள். மல்லாரி, நோட், மவுரி, ஒய்யாரி, பஞ்சரத்ன கீர்த்தனைகள், பாரதியார் பாடல்களை இசைத்தனர். ஒரே இடத்தில் எழுந்த இசை ஒலிகள் அந்த பகுதியை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தது. அந்த பகுதியையே இசை ஒலி அதிர வைத்தது. அரசியல் தலைவர்கள் உள்பட அனைவரும் தரையில் அமர்ந்து இசையை ரசித்தனர். சுமார் 1½ மணி நேரம் இசை மழை பெய்தது.

நிகழ்ச்சி முழுவதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமாக தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் பொங்கல் கோலப்போட்டியில் வென்ற பெண்களுக்கு மிக்சி, குக்கர், கட்டுமர போட்டிகளில் வென்றவர்களுக்கு எல்.இ.டி. டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியவற்றை பரிசளித்தார். பின்னர் அவர் கூறும்போது, மங்களகரமான திருநாளில் பாரம்பரிய இசையை நிகழ்த்துவதும், கேட்டு ரசிப்பதும் தமிழர்களுக்கு பெருமை. நமது பாரம்பரியத்துக்கு செய்யும் மரியாதை என்றார்.

English Summary: Thiruvalluvar Day is celebrated very grand in Chennai Mylapore Aadhi Kesava Perumal Temple with Special Musical Concert.