திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிகுந்த விசேஷ நாளாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி மே 4-ந் தேதி நள்ளிரவு தொடங்கி 5-ந் தேதி வரை இருப்பதால் 2 நாட்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை 29-ந் தேதியில் இருந்து விடப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வரக்கூடும்.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு மே 4, 5 ஆகிய தேதிகளில் 6,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தர்மபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *