அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
கடந்த 7 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்காவில் இருந்தபடி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் விஜயகாந்த், “கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். கருணாநிதியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத வருத்தத்தையும் விஜயகாந்த் தெரிவித்தார். மேலும், கருணாநிதியின் மறைவுக்கு நினைவுக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தடைந்த விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக மனைவி பிரேமலதாவுடன் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அமெரிக்காவில் இருந்து முதல்கட்ட சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மீண்டும் இரண்டாம் கட்ட சிகிச்சைக்கு சில மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.