இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் ஒருசில காட்சிகளை மட்டுமே சென்சார் அதிகாரிகள் கட் செய்ததாகவும், மற்றபடி படத்தை அவர்கள் வெகுவாக பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

‘புலி’ படம் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் தகுதியை பெற்றுள்ளது. விரைவில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு இந்த படம் காண்பிக்கப்பட்டு, வரிவிலக்கிற்காக விண்ணப்பம் செய்யவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  ‘புலி’ திரைப்படம் தொடர்ந்து  ‘யூ’ சர்டிபிகேட் பெறும் ஒன்பதாவது விஜய் படம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி, ஜில்லா, துப்பாக்கி, தலைவா, நண்பன், வேலாயுதம், காவலன், சுறா ஆகிய படங்கள் ‘யூ’ சர்டிபிகேட் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக விஜய் படங்கள் அனைத்துமே குழந்தைகள் மட்டும் குடும்பத்துடன் பார்க்கும்படியே கடந்த சில வருடங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘புலி’யும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நந்திதா, பிரபு, சுதீப், ஸ்ரீதேவி, வித்யூலேகா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார்.

English Summary: Vijay’s next film “Puli” gets the U Certificate. Its the 9th film to get “U” certificate of Actor Vijay.