photo_2015-09-16_11-30-18எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னர்தான் ஆரம்பிக்கும் வழக்கம் தமிழர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் அனைவரிடமும் உள்ள ஒரு வழக்கம். விநாயகர் முழு கடவுள் மட்டுமின்றி முதன்மை கடவுளாகவும் விளங்குபவர். தந்தையாக இருந்தாலும் சிவபெருமானே விநாயகரை வழிபட்ட பின்னர்தான் எந்த ஒரு செயலையும் செய்வார் என்று புராணங்கள் கூறுவதுண்டு. அத்தகைய பெருமை வாய்ந்த விநாயகருக்கு உரிய நாளாக விளங்கும் ‘விநாயகர் சதூர்த்தி’ தினத்தைதான் நாம் இப்போது கொண்டாட உள்ளோம்.

இந்து மக்கள் அனுஷ்டித்து வரும் விரதங்களில் முக்கியமானது விநாயக சதுர்த்தி விரதம். ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அவருடைய பக்தர்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் உலகெங்கிலும் உள்ள இந்துமதத்தை பின்பற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் விநாயகரை வழிபட்டு, விரதம் இருந்து, தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு இந்த கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்பட்டாலும் விநாயகரை அன்றைய தினம் வழிபட வேண்டும் என்ற நோக்கம் ஒன்றுதான்.

விநாயகருக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர்,photo_2015-09-16_11-30-16 குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல பெயர்கள் உண்டு. இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தம் கொள்ளப்படும். வி என்றால் மேலான என்றும் நாயகர் என்றால் தலைவர் என்றும், அதாவது தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்களை உடையவர் என்றும் அர்த்தம் கொள்ளப்படும்.‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே அடங்கியுள்ளது. உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் புராணம் என்ன கூறுகிறது: ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் அமைத்து தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபெருமான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு “கணேசன்” என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தார் என ‘நாரத புராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே விநாயகர் புராணம் ஆகும்.

photo_2015-09-16_11-30-08விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக பிள்ளையார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ‘ள’ என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பூஜ்ஜியமன வட்டதை ‘0′ பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை ” நாதம் என்றும் கொள்கின்றனர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. எந்த ஒரு செயலையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னர் தொடங்கினால் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே
கூடுகிறது. சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மாதாமாதம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கைக்கொள்கின்றனர். மாதாமாதம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது.

தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொரிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் photo_2015-09-16_11-30-21விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மட்டுமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர். ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, ‘ஆனந்த சதுர்த்தசியான’ பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர்.

எனவே சகல கஷ்டங்களையும் போக்கும் விநாயகரை இந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டு வாழ்க்கையில் எவ்வித பிரச்சனைகளிலும் நாமும் நம்மை சேர்ந்தவர்களும் சிக்காமல் இன்பமுடன் வாழ வணங்கி வேண்டுவோம்.

English Summary:Ganesha reaction solving.  special article on Ganesha chaturthi.