postசென்னையை அடுத்த பாடி துணை அஞ்சல் நிலையம் ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு, அதாவது CBS என்று சொல்லப்படும் Core Banking System ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் ஐடி நவீனமயமாக்கல் திட்டத்தின்படி ரூ. 800 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள், ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு (CBS) மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம், தாம்பரம் பிரிவின் கீழ் இயங்கி வரும் பாடி துணை அஞ்சல் நிலையம், ஒருங்கிணைந்த மைய வங்கி சேவைக்கு மாற்றப்பட்டுள்ளது. பாடி துணை அஞ்சல் நிலையம் தமிழகத்தின் ஆயிரமாவது CBS அஞ்சல் நிலையமாகும்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள சென்னை நகர மண்டல அஞ்சல்துறை அலுவலகத்தில் கடந்த 14-ம் தேதி நடந்தது.

சிபிஎஸ் சேவையின் மூலம் கணினி, மொபைல் போன், உள்ளிட்ட சாதனங்கள் மூலம் அஞ்சலக வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பாடி துணை அஞ்சல் நிலையம், சிபிஎஸ் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியின்போது, பொன்மகன் சேமிப்பு திட்டத்துக்கான வங்கி இருப்புக் கையேடு 10 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary:Integrated Banking Service to Change Padi Sub-Post Office.