திருப்பதி ஏழுமலையான் கோவிலில்: இந்துக்களின் புனித தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 16–ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் அங்குரார்ப்பணத்துடன் தொடங்கின.

நேற்று முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியுள்ளன. இதற்காக கோவிலுக்குள் உள்ள பழைய பரகாமணி சேவா குலு மண்டபத்தில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு மட்டும் 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாக சாலையில் பூஜைகள் செய்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து 44 வேத விற்பன்னர்கள், அவர்களுக்கு உதவியாளர்களாக 16 பேரும் வந்துள்ளனர்.

நேற்று காலை 6 மணியளவில் வேத விற்பன்னர்கள் யாக சாலைக்கு வந்து தீட்சை, கங்கணம் பெற்றுக்கொண்டனர். ஹோம குண்டங்களான ஆவாகநீயம், பவுண்டரீக குண்டம் என இரு வகையாக பிரித்து, அதில் தீ மூட்டி யாகம் வளர்த்தனர். இது, கோவிலில் தெரிந்தும், தெரியாமலும் நடந்த தோ‌ஷ நிவர்த்திக்காக செய்யப்பட்டது.

மாலை 5 மணியளவில் வேத விற்பன்னர்கள் யாக சாலைக்கு வந்து ஹோமம் வளர்த்தனர். பிரதான கும்பத்தை மூலவர் வெங்கடாஜலபதி, வரதராஜசாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, பாஷிங்கார்ல சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, வகுளமாதா சன்னதி, பேடி ஆஞ்சநேயர் சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் சன்னதிகளுக்குக் கொண்டு வந்து ஜீவசக்தி கும்பத்துக்கு மாற்றப்பட்டு, அதற்கு ஆராதனை, ஹோமம், சிறப்புப்பூஜைகளை செய்தனர்.

அந்த நேரத்தில் மூலவர் சன்னதிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ள வெள்ளிக்கதவு அருகில் நின்றிருந்தனர். மேலும் கோவிலுக்குள் வெளியே நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்கள், பகவத் கீதை பாராயணம் ஆகியவை இரவு 12 மணிவரை நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *