திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கருணாநிதி(95) வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை (07.08.2018) மாலை 6.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
திராவிட இயக்கத் தலைவர்களின் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தன்னிகரில்லாத அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவருமான முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ரத்த அழுத்தக் குறைவு மற்றும் சிறுநீரகத் தொற்று காரணமாக, முதலில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, பிறகு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மருத்துவமனையில் இருந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க, அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மத்திய, மாநில அமைச்சர்களும், நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்தனர்.
கருணாநிதியின் மரணம் குறித்து தகவல்கள் வெளியானதை அடுத்து மருத்துவமனைப் பகுதிக்கு ஏராளமான பொதுமக்களும் திமுக தொண்டர்களும் கண்ணீருடன் குவிந்துள்ளனர். தொண்டர்களைக் கட்டுப்படுத்த, அதிகப்படியான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.