சென்னை மெட்ரோ ரயில் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முழு அளவில் தயாராகியுள்ள கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான ரயில் சேவை மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்ட 8 பெட்டிகளுடன் கூடிய 2 ரயில்கள் நேற்று சென்னைக்கு வந்துள்ளன.

ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் டிரைலர் லாரிகள் மூலம் சாலை வழியாக இந்த ரயில்கள் சென்னை கோயம்பேடுக்கு கொண்டு வரப்பட்டன. இதன் மூலம், மெட்ரோ ரயில் சேவைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 24 மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனத்திடம் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் பிரேசில் நாட்டில் இருந்தும், ஆந்திர மாநிலம் தடா அருகேயுள்ள ஸ்ரீசிட்டியில் அமைத்துள்ள கிளை நிறுவனம் மூலமும் ரயில் பெட்டிகளை தயாரித்து வந்தது.

பிரேசில் நாட்டில் 9 ரயில்களும், ஆந்திர மாநிலம் தடாவில் 33 ரயில்களும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதில், பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் கப்பல் மூலம் ஏற்கெனவே சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விட்ட நிலையில் தற்போது ஆந்திராவில் இருந்து இரண்டு ரயில்கள் சென்னைக்கு வந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து இதுவரை 4 பெட்டிகள் கொண்ட ஒவ்வொரு ரயிலாக மொத்தம் 22 ரயில்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 8 பெட்டிகளுடன் 2 மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்து சேர்ந்தன. ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் அனுப்பப்படுவது இது இரண்டாவது முறையாகும். மெட்ரோ ரயிலுக்கான ஒரு பெட்டியைத் தயாரிக்க சுமார் ரூ.9 கோடி செலவாகிறது. ஒட்டுமொத்தமாக பெட்டிகள் தயாரிப்புக்கு ரூ.1,471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்போது, சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக கைவசம் 96 பெட்டிகள் கொண்ட 24 ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 9 மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் மாதத்துக்குள் சென்னை வந்து சேரும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary : 2 new metro trains has been imported from Andhra Pradesh to Chennai. So far 22 trains has been imported.