கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தினத்தில் உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு ஆலோசனை கூற 104 என்ற எண்ணின் மூலம் உளவியல் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இந்த கவுன்சிலிங் மூலம் சுமார் 6,000 மாணவர்களும் பெற்றோர்களும் பயன் அடைந்தனர். இதையடுத்து இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதால் மீண்டும் தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 104 மருத்துவ சேவை வழியாக இலவச ‘கவுன்சிலிங்’ அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் வழங்கப்படும் இந்த உளவியல் ஆலோசனை, தேர்வு முடிவுகளை அச்சமின்றி எதிர்கொள்வது, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும், தோல்வி அடைந்தாலும் கவலைபடாமல் அடுத்த கட்ட முயற்சியை தொடங்க வேண்டியது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

மாணவர்கள் சோர்வு ஏற்படாமல் மீண்டும் எப்படி வெற்றி பெறுவது, தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது போன்ற ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் உளவியல் மருத்துவ குழு அளிக்கிறது.

104 சேவை எண்ணில் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு இந்த உளவியல் கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை மாணவர்களும் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் 104 சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள இந்த உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. 50 உளவியல் ஆலோசனை மருத்துவர்கள் 24 மணி நேரமும் இந்த சேவையை அளித்து வருகின்றனர். மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இது உதவியாக இருக்கும்.

English Summary : 24-hour psychological counseling for 10th students due to results.