central25116இந்தியா முழுவதும் நாளை அதாவது ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து சென்னையில் நாளை குடியரசு தின சிறப்பு அணிவகுப்பு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறாவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவினரும் எச்சரித்துள்ள நிலையில்
தமிழகத்தில் கடலோர பகுதிகள் மட்டுமின்றி, அனைத்து முக்கிய நகரங்களுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் வணிக வளாகங்கள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் உள்ள 2 வாயில்கள், புறநகர் ரெயில் நிலையத்தை யொட்டியுள்ள நுழைவு வாயில் ஆகியவற்றில் வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதே போல, ரெயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வழக்கமான கால கட்டங்களில் 15 போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். தற்போது இந்த பாதுகாப்பு 4 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் விமான நிலையம் முழுவதிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 27ஆம் தேதி வரையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English Summary: 3 Layer Protection in Central Railway Station on account of Republic day Function.