Anna-universityசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலை அரங்கில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கினார். இந்த விழாவில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பிஎச்.டி. உள்பட அனைத்து தரப்பு மாணவ- மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் மொத்தம் 74 மாணவ-மாணவிகள் தங்கபதக்கமும், 1,385 பேர் பிஎச்.டி. பட்டமும் பெற்றனர். நேரில் பெற்றவர்கள் மற்றும் தபால் மூலம் பட்டம் பெற்றவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 152 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் பி.இ. உள்ளிட்ட இளங்கலை பட்டம் பெற்றவர்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 390 பேர்.

இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குனர் விஞ்ஞானி என்.வளர்மதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாபல்கலைக்கழகத்திற்கு எனது இதயத்தில் பெரிய இடம் உள்ளது. காரணம் நான் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலை பட்டம் பெற்றேன். பட்டம் பெறும் மாணவர்களே நீங்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொடுத்து வைத்தவர்கள். எதையும் திட்டமிட்டு புரிந்து படிக்க வேண்டும். அதே நேரத்தில் கடினமாக உழைக்க வேண்டும். நன்றாக படித்தால் மட்டும் போதாது. நல்லொழுக்கங்களை கற்று அதன்படி நடக்கவேண்டும்.

நீங்கள் இன்றைய நவீன உலக்குக்கு ஏற்ப, சமூகத்தில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிற திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும். எதை படித்தாலும் அதை ஆழமாக படியுங்கள். அறிவியலில் உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் தீர்வாக அமையும். இளம் பட்டதாரிகளான நீங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துங்கள்.

இவ்வாறு விஞ்ஞானி என்.வளர்மதி கூறினார்.

மேலும் இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசும்போது, ‘இந்தியாவிலேயே பள்ளிக்கல்வி படிப்போர் சதவீதம் தமிழ்நாட்டில் 94.73 சதவீதமாகவும் உயர்கல்வி படிப்போர் சதவீதம் 44.8 ஆகவும் உயர்ந்துள்ளது’ என்று கூறினார்

இந்த பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா, என்ஜினீயரிங் கல்லூரிகளின் ‘டீன்’கள் நாராயணசாமி, சிவநேசன், ராஜதுரை, மான்சிங் தேவதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் வரவேற்றார்.

English Summary: 36-th convocation of Anna University Chennai. Governor participated.