தமிழகத்தில் அக்.25ஆம் தேதிக்குள் 770 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: நோய் தொற்று ஏற்படக்கூடிய பருவ காலங்களில் லேப் டெக்னீசியன்கள் பணி மிக முக்கியமாகும். அதற்கு ஏதுவாக லேப் டெக்னீசியன்கள் 770 பேருக்கு அக்.25ஆம் தேதிக்குள் பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

பன்றி காய்ச்சலால் பாளையங்கோட்டையில் பாதிக்கப்பட்ட மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அளிக்கப்பட்ட தரமான சிகிச்சையின் பயனாக தற்போது முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான சந்தை, திருவிழா, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தால் சாப்பிடும் முன் கைகளை கண்டிப்பாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சாப்பிடும் முன் கைகளை கழுவுவதால் 80 சதவீத நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோரங்களில் மருத்துவ கண்காணிப்பு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *