டில்லி: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் அளிக்க தேவை இல்லை என்னும் தீர்ப்பை அடுத்து மாற்று திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
மொபைல் எண்களோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆதார் எண்ணை மொபைல் நிறுவனங்களுக்கு அளிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆதார் சரிபார்ப்பு என்பது இணையத்தின் மூலமாக நடைபெறுவதால் அந்த நேரத்தில் ஆதார் விவரங்களை மொபைல் நிறுவனங்கள் அறிந்துக்கொள்ளும் என்பதே ஆகும்.
இதை ஒட்டி அரசின் தனி மனித அடையாள நிறுவனம் நேற்று முன் தினம் நீதிமன்ற தீர்ப்பின் படி மொபைல் நிறுவனங்கள் ஆதாருக்கு பதிலாக மாற்று திட்டங்களை கண்டறிந்து வரும் அக்டோபர் மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. தற்போதுள்ள நிலையில் முன்பு போல அடையாளங்களை வாங்கி சரிபார்க்கும் நீண்ட செயல்முறை நடைமுறைக்கு வர உள்ளது.
மத்திய அரசு, ஆதார் நம்பரை அளிப்பதன் மூலம் ஆஃப்லைனில் பரிசோதிக்க உதவக்கூடிய சாத்தியங்களை பற்றி தெரிவித்துளது. ஆஃப்லைனில் கே ஒய் சி குறியீட்டை பெற்று அதன் மூலம் பரிசோதிப்பதால் ஆதார் விவரங்களை அறிந்துக்கொள்ள முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆதார் அட்டையில் உள்ள கியூ ஆர் கோடை டவுன் லோடு செய்துக் கொள்வதன் மூலம் அதை இணையத்துக்குள் செல்லாமல் ஆதார் கார்டு கியூ ஆர் கோடுடன் சோதனை செய்துக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த கியூ ஆர் கோட் மூலம் பெயர் மற்றும் முகவரி மற்றுமே தெரிய வரும் என்பதால் இது பாதுகாப்பானது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், “இந்த முறை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஆனால் ஒருவர் இந்த முறை மூலம் அரசுக்கு தெரியாமல் புதிய சிம் கார்ட் வாங்க முடியும். மேலும் புதிய வங்குக் கணக்கு துவங்குவது, புதிய காப்பீடு திட்டம் தொடங்குவது ஆகிய அனைத்தையும் அரசு அறியாமலே செய்ய முடியும். இதனால் அரசுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்காது” என தெரிவித்துள்ளார்.