மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஏற்கனவே 24.1.2015 மற்றும் 6.2.2015 ஆகிய நாட்களில் நடைபெற்றது. நேற்றும் (04.03.2015) அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், பன்றிக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான ஆய்வக ஏற்பாடுகள் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், கிண்டி கிங் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
சுகாதாரமான முறையில் கை கழுவுதல் பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பன்றிக் காய்ச்சலைக் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான உடனடி சிகிச்சை அளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், பன்றிக் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் கிங் இன்ஸ்டியுட் பரிசோதனை கூடத்தை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தக் ஆய்வுக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் டாக்டர் எ. சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, கிங் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டாக்டர் குணசேகரன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary: Study on Preventive measures and Laboratory for Diagnosis of Swine Flu by People Welfare Minister Dr.C.Vijay Baskar.