ென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:
‘ஃபானி’ புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு இருக்கிறது. அது தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இந்த தீவிர புயல் 29-ந் தேதி (இன்று) அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதியும் (நாளை), 1-ந் தேதியும் (நாளை மறுதினம்) வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வரக்கூடும். அதன்பிறகு திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும்.
மழை இல்லை
இதனால் பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்துக்கு இந்த புயலினால் நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை.
இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும்போது, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
வெப்பம் அதிகரிக்கலாம்
30-ந் தேதியும், 1-ந் தேதியும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்லும்போது, 3-ந் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து அதிகளவில் நிலக்காற்று வீசும்.
ஆகவே தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம். அப்போது சாதாரண நாட்களை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.