இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் அவ்வப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பத்தை உணர்ந்தவுடன் பொதுமக்கள் வேகவேகமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதால் இதனை தவிர்க்க அமெரிக்காவில் பூகம்பம் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பே பூகம்பம் வரப்போவதை தெரிவிக்கும் ஒரு செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு’மை ஷேக்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனில் இந்த செயலியை இண்ஸ்டால் செய்து கொண்டு நாமும் பூகம்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த பெர்கேலி நிலநடுக்க ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் மற்றும் டியூட்ஸ் டெலிகாம் நிறுவனம் ஆகியவை இனைந்து இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். சிறிய அளவு பேட்டரியை மட்டுமே பயன்படுத்தி, நமது செல்போனில் பின்னணியில் இயங்கும் இந்த செயலி எந்நேரமும் அதிர்வுகளை அலசிக்கொண்டே இருக்கும். அப்படி அதிர்வுகள் ஏதேனும் சிறிய அளவில் ஏற்பட்டாலும் செல்போனில் இருக்கும் மோஷன் சென்சார் அதைப் பதிவு செய்து, அதிர்வின் அளவு, நேரம், செல்போன் இருக்கும் இடம் ஆகிய தகவல்களை பெர்கேலி ஆய்வகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அந்த அதிர்வு ஆராயப்பட்டு, அது நிலநடுக்கத்தின் முன்னறிவிப்பாக இருக்கும் பட்சத்தில், நமது செல்போனுக்கு ஐந்து நிமிடங்களுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். பூகம்பம் ஏற்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பும், அதன் பின்னர் நான்கு நிமிடங்களும் அத்தகவல் நமது செல்போனிற்கு அனுப்பப்படும். அதன் மூலம் நாம் முன்னரே உஷாராக வெளியேறி விடலாம். இதனால் உயிரிழப்புகள் பெரிய அளவில் தவிர்க்கப்படும்.
“பூகம்பத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் நேபாளம், பெரு போன்ற நாடுகளில் பூகம்பம் பற்றிய முன்னறிவிக்கை மையங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, நில அதிர்வைப் பற்றிய ஒரு பிணையத்தை உருவாக்குவதே இந்த செயலியின் இலக்கு” என்று டியூட்ஸ் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலி போன் சார்ஜில் இருக்கும் போதும், வை-ஃபை-யோடு இணைக்கப்பட்டிருக்கும் போதும் வேலை செய்யும். இதனால் இந்த செயலியைஇன்னும் மேம்படுத்தும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப்ரவரி 22ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் உலக செல்போன் மாநாட்டில் இந்த மை ஷேக் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஐ போன்களுக்கும் இந்த ஆப் கிடைக்கிறது. மனிதனின் நேரத்தை எத்தனையோ அப்ளிகேஷன்கள் விழுங்கி வரும் நிலையில், இந்த செயலி நிச்சயம் ஒரு உயிர் காக்கும் பொக்கிஷமாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
English summary-App to predict earth quake