தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து முதல் கட்ட நுழைவுத்தேர்வு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. அடுத்தகட்ட நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல மாநிலங்கள் வறுபுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தேசிய தகுதிகாண் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் 2006-இல் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால்,அந்தச் சட்டத்தை கணக்கில் கொள்ளாது, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வை திணிப்பது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் மெளனம் சாதிப்பது முறையல்ல.
மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தமிழக மாணவர்களின் நலன்களைக் காத்திட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Doctor’s Union requested to bring an emergency law to cancel Medical entrance exam.