எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் வழங்கப்படும் என கூறப்படும் நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-2018-ஆம் கல்வியாண்டுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ஆம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களில் 751 இடங்கள் நிரம்பின. மீதம் உள்ள 103 இடங்களுக்கு இன்றும் நாளையும் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும். முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கும், எம்.பார்ம் படிப்புக்கான கலந்தாய்வு காலை 10.30 மணிக்கும் தொடங்குகிறது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளவிருக்கும் பங்கேற்பாளர்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
English Summary : PG medical courses counseling will be today and tomorrow.