travellexhibition2116சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையை பொங்கல் திருநாள் முதல் கோடை விடுமுறை காலம் வரை அரசு சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம் அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தொடங்கிய 42-ஆவது சுற்றுலாத் துறை தொழில் பொருட்காட்சியை பார்க்க ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பொருள்காட்சியைக் காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பெண்களுக்கான சமையல் உள்ளிட்ட ஒருசில போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தப் பொருள்காட்சி திடலில் தமிழ்நாடு அரசுத் துறை சார்பில் 29 அரங்குகளும், அரசுத் துறை நிறுவனங்கள் சார்பில் 13 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் அரசின் அனைத்துத் துறை தகவல்களும் இடம் பெற்றுள்ளதாலும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாலும் இதைக் காண பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருகை தந்து கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறிதாவது: எப்போதுமே ஜனவரி முதல் வாரத்தில் பொருள்காட்சி தொடங்கும். இந்த ஆண்டில் மழை போன்ற காரணங்களால் பொருள்காட்சி தாமதமாகவே தொடங்கப்பட்டது. இதனால், அரங்குகள், கடைகள் அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. எப்போதுமே தொடங்கிய 15 நாள்களில் பொதுமக்கள் அதிகம் வருவதால் வசூலும் அதிகமாக இருக்கும். விடுமுறை நாள்களில் பார்வையாளர்கள் அதிகமாக வருவர். இந்தப் பொருள்காட்சி தொடங்கிய 32 நாள்களில் இதுவரை 5.85 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம், ரூ.1.18 கோடி வருவாயும் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே நாள்களில் 6.25 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

இனிவரும் நாள்களில் பொருள்காட்சிக்கு பார்வையாளர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக, பெண்களுக்கான சமையல், கோலப் போட்டிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாள்தோறும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கும் பரிசுகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். சுற்றுலா துறையின் இந்த அறிவிப்பால் அதிகளவில் பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

English Summary: A new initiative to enhance the audience’s arrival in Chennai Exhibition.