metroசென்னையில் கடந்த ஆண்டு முதல் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கி வரும் நிலையில் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சைதாப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாலத்தில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இந்த பகுதியில் சிக்னல்கள், மென்பொருள் சோதனை உள்பட இதர பணிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சின்னமலை – ஓடிஏ இடையிலான வழித்தடத்தில் நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நிறைவடைந்துவிட்டது. தற்போது சின்னமலை – பரங்கிமலை ராணுவப் பயிற்சி அகாதெமி வரை மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதேபோல, மின் இணைப்பு வேலைகள் உள்பட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இப்போது சிக்னல்களை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

இதனிடையேசின்னமலை- மீனம்பாக்கம் விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மெட்ரோ ரயில் சேவை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை விரைவில் நீட்டிக்கப்படவுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தின்போது 30 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அப்போது திருப்தி ஏற்படும்பட்சத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்படும். இதையடுத்து, அவர் ஆய்வு செய்து பயண ரயில் இயக்குவதற்கான அனுமதியை அளிப்பார்.

மேலும் சின்னமலை- மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயிலின் அதிகாரப்பூர்வமான பயணிகள் போக்குவரத்து வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கோயம்பேடு – எழும்பூர் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்படும்.

மேலும், விமான நிலையம் – எழும்பூர் இடையிலான உயர் நிலை, சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English Summary: Metro Rail Project Completed Between Saidapet to Airport.