housingboard24216சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அட்வான்ஸ் எனப்படும் முன்பணம் பெற்று வருவதை தடுக்கும் விதத்தில் ‘வாடகை மாதிரி சட்டம்’ விரைவில் வரவுள்ளதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பெரும்பாலான பொதுமக்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். அலுவல், கல்வி, பணியிட மாற்றம், வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு குடியேறுகின்றனர். சென்னை போன்ற பெருநகரத்தில் இந்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சென்னையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போகிறது. இதனைப் பயன்படுத்தி, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இஷ்டம்போல் வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையை நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

இந்த போக்கை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு வாடகை மாதிரிச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் சட்ட மசோதாவைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

வாடகை மாதிரிச் சட்டம் அமலுக்கு வரும் நிலையில், இனி வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இஷ்டம் போல் முன்பணம் பெறுவது தடுக்கப்படும். குறைந்தது 3 மாத முன்பணம் மட்டுமே வசூலிப்பது, வாடகை உயர்த்துவதை முன்கூட்டியே தெரிவிப்பது, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, வாடகைதாரர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை விசாரிக்க தனி ஆணையம் அமைப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியபோது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று கூறினர்.

English Summary: Sample Rental Act will be launched to prevent tenants from house owners for paying excess of Advance Money.