பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *