வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 03.08.2023 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14,449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

வரவிருக்கும் ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *