அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் அனிருத், அஜீத் படத்திற்காக ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு பட வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி வரும் பிரபல நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் ‘மை நேம் இஸ் ராஜு” என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தனது இடைவிடாத பிசி காரணமாக தன்னால் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய முடியவில்லை என்றும் அதனால்  இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அனிருத் அறிவித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அனிருத் தற்போது தனுஷின் ‘மாரி’, விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, ஏ.ஆர்.முருகதாஸின் ‘அகிரா’, போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.