கடந்த 1959ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிக அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடிய மாவீரனின் கதையில் நடித்த சிவாஜி கணேசனுக்கு இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் என்ற பட்டமும் கிடைத்தது.

இந்நிலையில் சுமார் 55 வருடங்கள் கழித்து வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை சாய் கணேஷ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மீண்டும் புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் தயார் செய்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா லெட்சுமணன், ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், நடிகர் விக்ரம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, “தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, சகஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் என தமிழ் கதாநாயகர்களின் குரல்களையெல்லாம் என் மனதின் அடுக்குகளில் பதிய வைத்துப் பார்க்கிறபோது, ஒரே ஒரு தமிழ்க் குரல், ஒரே ஒரு ஆண் குரல், அது சிவாஜியின் குரல் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் மொழிக்கே பெருமை கொடுத்த குரல் அது’ என்று கூறினார்.