Anna_Univ_0505தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 60 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு அதிகளவு மாணவர்கள் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பால்  2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் விற்பனை மையங்கள் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய 4 மையங்களில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

பொறியியல் விண்ணப்பங்களை பெற கட்டணம் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் நகலை கொண்டு வரும் எஸ்சி, எஸ்டி வகுப்பு மாணவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் மாணவர்கள் கட்டணம் ரூ.700,  எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.450. விண்ணப்பக் கட்டணத்தை ‘The Secretary, Tamilnadu Engineering Admissions’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிடி எடுத்து ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600 025’ என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கடைசி தேதி மே 27 ஆகும். ஆனால்  அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மட்டும் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

இவ்வாறு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித் துள்ளார்.