கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோயின. வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் சேதமானதோடு, முக்கிய ஆவணங்களும் சேதமாகின. இந்நிலையில் வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்காக ஏற்கனவே சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து தேர்தல் ஆணையம் செலவின்றி புதிய வாக்காளர் அட்டையை வழங்கியது. இந்நிலையில் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சிறப்பு முகாமை நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பலர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இழந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகளில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் சிறப்பு முகாம்களில் கட்டணமின்றி வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி வழங்கப்பட்டது.
தற்பொழுது, நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016க்கான முன்னேற்பாட்டினை கண்காணிக்கும் பொருட்டு 11.02.2016 அன்று தமிழகத்திற்கு வருகை புரிந்த தேர்தல் ஆணையக் குழு சென்னை, கடலுர், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தின் போது வாக்காளர் அடையாள அட்டையை இழந்து, வாக்காளர் அடையாள அட்டை இதுவரை பெறப்படாத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக பெறுவதற்கு ஏதுவாக 29.02.2016 வரை விண்ணப்பிக்க மற்றொரு வாய்ப்பை வழங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதின் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலர் அலுவலகங்களில் படிவம் 001ஐ பூர்த்தி செய்து நேரிடையாக வழங்கலாம். இது தவிர மேற்கண்ட மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்விவரங்களின் அடிப்படையில் வாக்காளருக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாய்ப்பினை மழையினால் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
English Summary: Another opportunity for the people who lost their voter IDs in the recent floods.