யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 22 பணிகளுக்கு யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு(preliminary),முதன்மைத் தேர்வு(mains), நேர்காணல்(interview) இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல் நிலை தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.

சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலையில் இரண்டு தாள்கள் உள்ளன. அதில் முதல் தாள் ‘General studies’. இதில் பொதுஅறிவு, வரலாறு, அறிவியல், சமூக அறிவியல், அரசியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதேபோல இரண்டாம் தாள் ‘CSAT’. இதில் மாணவர்களின் திறனை அறியை கூடிய வகையில் கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டாம் தாளில் மாணவர்கள் 33 சதவிகிதம் மதிப்பெண் மட்டும் பெற்றால் போதுமானது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைபவர்கள் முதன்மை தேர்விற்கு செல்வார்கள். இந்த முதன்மை தேர்வில்(Mains exam) நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடத்தின் (optional subject) இரண்டு தாள்கள் மற்றும் ஒரு கட்டுரை தாளும் உள்ளன. இதில் ஒவ்வொரு தாள்களுக்கும் 250 மதிப்பெண்கள் கொண்டுள்ளன. இந்த 7 தாள்கள் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலில் (personality interview) மாணவர்களின் தகுதி பற்றி ஆராயப்படும் வகையில் கேள்விகளை யுபிஎஸ்சி உறுப்பினர்கள் தலைமயிலான குழு கேட்டறியும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 275. இறுதியில் முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள் இரண்டும் சேர்க்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வின் முதல் நிலை வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணபங்கள் ஆன்லைனில் இன்று முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *