ஆசியாவின் மிக இளவயது கோடீஸ்வரர்கள் குறித்த ஒரு பட்டியலை கடந்த சில நாட்களாக “வெல்த் எ எக்ஸ்” என்ற தனியார் நிறுவனம் எடுத்து வந்தது. இந்த பட்டியலில் இந்தியா, சீனா, ஜப்பான்,உள்பட ஆசிய நாடுகளில் உள்ள 40 வயதுக்கு உட்பட்ட தொழிலதிபர்களின்  பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பட்டியலின் முடிவுகள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சென்னையில் பிறந்த அருண்புதூர் என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். சென்னையில் பிறந்த இவர் சிறுவயதிலேயே பெங்களூரூக்கு சென்று அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் மலேசியா சென்று அங்கு தொழில் தொடங்கி இளவயதிலேயே வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 25 ஆயிரத்து 580 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998ஆம் ஆண்டு செல்பிரேம் என்ற நிறுவனத்தை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கிய இவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மென்பொருள் நிறுவனம் தவிர கனிமச் சுரங்கம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் அருண்புதூர் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த பட்டியலில் அருண்புதூரை அடுத்து இரண்டாவது இடத்தை  சீனாவைச் சேர்ந்த ஜோ யாஹுயி என்பவர் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 220 கோடி டாலர் ஆகும். இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் உள்ள ஒரே இந்தியர் அருண்புதூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Asia Youngest Billionaire Industrialist is Arun Pudhur from Chennai. He is the only Indian in Top 10 of the Youngest Industrialist.