helmet
இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை போலீஸார் இன்று முதல் 324 இடங்களில் வாகன சோதனையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவரை ஹெல்மெட் அணியாமல் செல்பவரை பிடிக்க சென்னையில் 124 இடங்களில் மட்டுமே சோதனை மேற்கொண்டதாகவும், இன்று முதல் கூடுதலாக 200 இடங்களில் சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அதற்குரிய ஆயத்தப் பணிகளில் சென்னை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பதியப்படும் வழக்குகளில், 20ல் இருந்து 30 சதவீதம் வரை ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீதே பதியப்படுவதாகவும், இந்த சதவீதம் வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமே தலைக்கவசம் அணியவில்லை என பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதால், வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் உயர்நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதம் வரை உடனடியாக உயரும் என காவல்துறையினர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மிஞ்சிய 15 சதவீதம் பேரை தலைக்கவசம் அணிய வைப்பதிலேயே போலீஸாரின் வெற்றியும், திறமையும் உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary:Chennai Police forms 324 Checkposts to catch peoples who are all not wearing the Helmets