Vinayaka-idolநேற்று முன் தினம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதூர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பயபக்தியுடன் விநாயகரை வணங்கினர். இந்நிலையில் விநாயகர் சதூத்தி தினத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க சென்னை காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் சுமார் 2400 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக  12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைகளுக்கு இந்து அமைப்பினரும், பொது மக்களும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வருகிற 20ஆம் தேதி, 21ஆம் தேதி, 23ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான சிலைகள் 20ஆம் தேதியே கரைக்கப்படலாம் என தெரிகிறது.

இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படும் என்றும், சிலையை கரைக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரவு நேரத்திலும் சிலை கரைப்பு பணிகள் நடப்பதால் மின் விளக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

English Summary:Chennai Police Special Arrangements For Immersion of Ganesh Idols.