சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரவேற்பு பதாகைகள், கண்ணை கவரும் விளக்குகள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சிலையின் பின்புறம் தமிழகத்தின் புராதன சின்னங்கள், முக்கியமான சுற்றுலா தலங்கள், தமிழக அரசின் சாதனைகள், செயல்பாடுகள் குறித்து வீடியோ காட்சியாக ஒளிபரப்பு செய்யும் வகையில் அரை வட்ட வடிவில் பிரமாண்டமான ‘புராஜெக்டர் டூம்’ அமைக்கப்பட்டு உள்ளது. அடிப்பகுதி தண்ணீர் நிரப்பப்பட்டும், அதற்கு மேல் உள்ள பகுதிகள் காற்று நிரப்பப்பட்ட தூண்களின் உதவியோடு 60 அடி வட்ட பரப்பளவில் 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உள்ளே 6 ‘புராஜெக்டர்கள்’ வைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஒரே சமயத்தில் படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். இதனை பொதுமக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியில் இருந்தபடியும் இந்த வீடியோ காட்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரையில் பொதுமக்கள் பார்க்கலாம். வரும் 10ஆம் தேதி வரை இந்த ‘புராஜெக்டர் டூம்’ மெரினா கடற்கரையில் இருக்கும் என்றும் அதற்கு பின்னர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மீன் மார்க்கெட் அருகே மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புரொஜெக்டர் டூம் சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், கடற்கரைக்கு வரும் ஏராளமானோர் ஆர்வத்துடன் இதை பார்வையிட்டு செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதேபோன்று அடையாறு திரு.வி.க பாலம் அருகே தெற்கு கெனால் சாலை ஆற்று மையப்பகுதியில் ‘வாட்டர் ஸ்கிரீன்’ என்ற தண்ணீர் திரையில் காட்சிகள் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு நேற்று தொடங்கப்பட்டது. இதில் தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி தண்ணீர் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக ஆற்றில் உள்ள தண்ணீரை அதிக குதிரை திறன் (எச்.பி.) கொண்ட நவீன மோட்டார் பம்புகள் மூலமாக உறிஞ்சப்பட்டு, தண்ணீர் திரை அமைக்கப்பட்டது.

இருள் சூழ்ந்த நேரத்தில் மட்டுமே காட்சிகள் தெளிவாக தெரியும் என்பதால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை வீடியோ காட்சிகள் ‘புராஜெக்டர்’ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சிங்கப்பூர் தொழில்நுட்ப முறையில் இந்தியாவில் தண்ணீர் திரை ஏற்படுத்தி, வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் இதனை கண்டு களிக்கும் வகையில் பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை வழியாக பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆகாயத்தில் தண்ணீரால் அமைக்கப்பட்ட திரையில் படக்காட்சிகள் தெரிந்தது, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படக்காட்சிகள் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 4 நிமிடம் ஓடும் தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ 4 முறையும், கண்ணைக்கவரும் லேசர் ஒலி-ஒளி காட்சிகளும் தண்ணீர் திரையில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

English Summary : Chennai government has announced a Video presentation in Water screen around 7pm to 9pm at S. P. Adithanar road.