புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி நியமனத்திற்கான பணிகள் தொடங்கின. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று முறைப்படி பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஆனால் அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அக்டோபர் 1-ம் தேதி அவரது கடைசி பணி நாளாகும். அக்டோபர் 3-ம் தேதி புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #RanjanGogoi